அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் அவதி அடிப்படை வசதியில்லாத சங்கராபுரம் சாலைகள் படுமோசம்

காரைக்குடி, டிச.4:  காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரி நகர் உள்பட 10 பகுதிகளில் சாலை உள்பட அடிப்படை வசதியில்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி நகராட்சிக்கு இணையாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இவ்ஊராட்சிக்கு உட்பட்ட சபரி நகர், கேவிஎஸ் நகர், செல்லப்பா நகர், ஜெய்ஹிந்த் நகர், உதயம் நகர், நியூகேவிஎஸ் நகர், சிவா நகர், சிவானந்தா நகர், கே.கே நகர் பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் எங்கும் சாலைகளே இல்லை. மண் சாலைகளாகவும், சாலை ஓரங்களில் பள்ளம், படுகுழிகளாகவும் உள்ளன. தெரு விளக்குகள் இருந்தும் எரியாத நிலையே தொடர்கிறது. குடிநீர் பிரச்சனை அதிகஅளவில் உள்ளது. தவிர குப்பை வாங்க வராததால் வீடுகளுக்கு முன்பு குப்பைகளை போட்டு மக்கள் எரித்து வருகின்றனர். கழிவுநீர் செல்ல முறையான வசதிகள் இல்லை.  ஊராட்சி தலைவர் இருந்த வரையில் தெருவிளக்கு, குப்பை வாங்கும் பணி சரியாக நடந்து வந்தநிலையில் தற்போது அதிகாரிகளின் மெத்தன போக்கால் கண்டுகொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை வசதி என்பது முற்றிலும் இல்லை. குண்டும் குழியுமான சாலைகளில் தினமும் பள்ளி மாணவர்கள் விழுந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள மரண பள்ளங்களில் பலர் விழுந்துள்ளனர். ஊராட்சி தலைவர் இருந்த போது இப்பகுதியை பார்வையிட்டு உரிய நிதி ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். ஆனால் பதவிகாலம் முடிந்ததால் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு என புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி கூறுகையில், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் சாலைகள் போடப்பட்டன. இப்பகுதிகளில் சாலை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. ரூ.3 கோடிக்கு மதிப்பீட்டு பட்டியல் தயார் செய்து, கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டன. பதவி காலம் முடிந்ததால் கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தெருவிளக்கு, குடிநீர் பிரச்சனை குறித்து மக்கள் என்னை தொடர்புகொண்டு சொல்லும் போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி சரி செய்து வருகிறேன். உரிய நிதி பெற்று வரும் காலத்தில் சாலை உள்பட அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: