ரோட்ேடாரம் விற்பதை தவிர்க்க இறைச்சி கடைகளை அமைக்க மானாமதுரை மக்கள் வலியுறுத்தல்

மானாமதுரை, டிச.4: மானாமதுரையில் தெருக்களில் இஷ்டம் போல் அமைந்துள்ள இறைச்சிக்கடைகளை முறைப்படுத்திட தனி இடம் ஒதுக்கிடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த மக்களுக்கான காய்கறி, இறைச்சிக்கடைகள் கீழ்கரையில் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் இயங்கி வந்தது. அதன்பின் பேரூராட்சி அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்ட போது காய்கறிகடைகள் மட்டும் அங்கிருந்து வாரச்சந்தை அருகே மாற்றப்பட்டது. மீதம் இருந்த இறைச்சிக்கடைகளுக்கு மக்கள் செல்லாததாலும் அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததாலும் மக்கள் செல்வதை தவிர்த்தனர். இதனால் அங்கிருந்த கடைகள் மூடப்பட்டு மேல்கரை மரக்கடை வீதி, பழைய பஸ்ஸ்டாண்டு, ரயில்வேகாலனி, உடைகுளம் ரோடு, சிப்காட், அண்ணாசிலை, ஆனந்தபுரம் பைபாஸ் என ஆட்டிறைச்சி கடைகள், மீன்கடைகள், கோழிக்கடைகள் இஷ்டம் போல் அமைக்கப்பட்டது. இதனால் பேரூராட்சி அலுவலகம் அருகே தற்போது இரண்டு ஆட்டிறைச்சி கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது.ஆடுகளை அறுப்பதற்கு ஆடு வதைக்கூடம் இருந்தும் இங்கு ஆடுகள் அறுக்கப்படுவதில்லை. சுகாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்படாமல் தெருக்களில் அறுக்கப்படும் ஆடுகளுக்கு நோய் இருந்தாலும் தெரியாமல் போவதால் வாங்கும் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆட்டிறைச்சி விற்கப்படுவதற்கு முறையான உரிமம் பெறவேண்டும். அறுக்கப்படும் ஆடுகள் பேரூராட்சி பின்புறம் உள்ள ஆடுவதைக்கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு முத்திரை இடப்பட்ட பின்னரே விற்பனைக்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஆனால் தினமும் இங்கு அறுக்கப்படும் எந்த ஆடுகளுக்கும் முத்திரை அடிப்பது கிடையாது. தற்போது மழைக்காலங்களில் காணைநோய் பாதித்து இறந்த ஆடுகளின் இறைச்சியும் விற்கப்படும் அபாயம் இருப்பதால் ஆடுவதைக்கூடத்தில் முத்திரை இடப்படாத ஆடுகளை விற்பதற்கு தடைவிதிக்கவேண்டும். மேலும் ஆட்டிறைச்சி விற்பனைக்கு என தனியாக பேரூராட்சி சார்பில் கட்டிடங்கள் பயன்பாட்டில் இல்லை. அதனால் தெருக்களில் கடை நடத்துபவர்களுக்கு பேரூராட்சி அலுவலகம் பின்புறம் காரைக்குடியில் உள்ளது போல தனியாக ஆட்டிறைச்சி கடை நடத்த கட்டிடங்கள் கட்டி அங்கு மட்டுமே விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: