பாதியில் நிற்கும் ஆதார் இணைப்பு பணி

சிவகங்கை, டிச. 4:  சுப்ரீம் கோர்ட் உத்தரவால் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல் எண் பதிவு செய்யும் பணி முடிவடையாமல் பாதியில் நிற்கிறது.  கடந்த 2016ம் ஆண்டு மார்ச் முதல் வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் மற்றும் உறுதிபடுத்தும் திட்டம் செயல்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல் எண், இமெயில் முகவரி இடம் பெறுவது மற்றும் இரட்டை பதிவுகள் நீக்கம், முகவரி திருத்தம், புகைப்படம் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் இதன்மூலம் செய்யப்படும் என கூறப்பட்டது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடத்தப்பட்டது. சம்பந்தபட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் ஜெராக்ஸை வழங்கி ஆதார் படிவத்தில் கையெழுத்திட வேண்டும். ஆதார் அட்டை இல்லையெனில், ஆதார் அட்டை எடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள ரசீதின் ஜெராக்ஸ் மற்றும் செல் எண்ணையும் வழங்க வேண்டும் என கூறப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி அளவில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் ஒன்றரை மாதங்கள் நடந்த இப்பணி மந்தமாக நடந்ததால் தொடர்ந்து தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து ஆதார் இணைப்பு பணி முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 50 சதவீத வாக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தனர். இதையடுத்து இப்பணிகள் முழுமையடையாமல் பாதியிலேயே நிற்கிறது. இதுகுறித்து தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது, ‘உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இடைக்கால உத்திரவின்படி, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி முழுவதும் நிறுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் இதர பணிகள், வாக்காளர் பட்டியல் தொடர்ந்து மேம்படுத்தும் பணி மற்றும் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. ஆனால் ஆதார் எண், செல்போன் எண் இணைப்பு பணி முழுமையாக நடக்கவில்லை. இப்பணிகள் பாதியில் நிற்பதால் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பதிவு ஆவணங்களில் எவ்வித வேறுபாடும் இருக்காது. ஆதார் எண் முழுமையான இணைப்பு பணிக்கு பிறகே அதுகுறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்’ என்றார்.

Related Stories: