அரசு பணிகளுக்கு பள்ளி மாணவர்கள் தற்போதே தயாராகுங்கள் கலெக்டர் அறிவுரை

சிவகங்கை, டிச. 4: அரசு பணிகளுக்கு பள்ளி மாணவர்கள் தற்போதிருந்தே தயாராக வேண்டும் என கலெக்டர் ஜெயகாந்தன் பேசினார். சிவகங்கை அருகே சோழபுரம் ஸ்ரீரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் பள்ளி அளவில் மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் வரவேற்றார். பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், ஒன்றிய அளவிலான இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது: கிராமப்பகுதிகளில் இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நேரு யுவகேந்திராவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. கிராமப்பகுதிகளிலுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து விளையாட்டில் ஊக்கப்படுத்துவதில்  நேரு யுவகேந்திரா சிறந்த பங்கு வகிக்கிறது. உயர்கல்வி வரை படிப்பதற்கும் தேவையான வழிகாட்டுதலை மேற்கொண்டு வருகிறது.

விளையாட்டிலும் சரி, உடல் ஆரோக்கியத்திலும் சரி நாம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்ற இலக்கை எளிதாக பெற முடியும். மாணவர்கள் கலந்து ஆலோசித்து படித்தால் நல்ல அறிவுத்திறனை பெற முடியும். இதனால் ஒவ்வொருவருக்குமிடையே உள்ள அறிவுத்திறன் பகிர்ந்து கொள்ளப்படும். இதனால் எல்லோரும் பயன்பெறுவதுடன் எந்த போட்டி தேர்வாக இருந்தாலும் எளிதாக வெற்றி பெறமுடியும். தற்போது அரசுப்பணிகள் அனைத்திற்கும் போட்டி தேர்வு மூலமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதை நீங்கள் பெறுவதற்கு தற்போதிருந்தே முயற்சி செய்ய வேண்டும். நல்ல கல்வி, உடல் ஆரோக்கியம் இது இரண்டுமே ஒரு மனிதனுக்கு முழுமையான வெற்றியாகும். இவ்வாறு பேசினார். ஸ்ரீரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஜவஹர், உதவி தலைமையாசிரியர் கணேஷ், சமூக ஆர்வலர் அனந்தராமன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.  

Related Stories: