நீண்ட நேரம் வாகனங்கள் நிறுத்தம் கரூர் எம்ஜி சாலையில் போக்குவரத்து நெருக்கடி

கரூர், டிச. 4: வாகன நிறுத்தம் காரணமாக கரூர் எம்ஜி சாலையில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட திண்ணப்பா கார்னர் பகுதியில் இருந்து சேலம் பைபாஸ் சாலை வரை எம்ஜி ரோடு உள்ளது. இந்த சாலையின் இருபுறமும், காமராஜ் நகர், செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம், 80 அடி ரோடு, கவுரிபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் கட்ரோடுகளாக பிரிகிறது. மேலும் இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கில் ஜவுளி நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. அதிகளவு தொழில் நிறுவனங்கள் உள்ள சாலைப்பகுதி என்பதால் அதிக வாகன போக்குவரத்து நடைபெறும் பகுதியாக உள்ளது.

இந்நிலையில் மாலை நேரங்களில் எம்ஜி சாலையில் சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் போன்ற பல்வேறு வாகனங்கள் நீண்ட நேரம் நிற்கும் காரணத்தினால் பிற வாகனங்கள் இநத சாலையில் எளிதாக செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் எம்ஜி சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மாற்று வழியில் செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, எம்ஜி சாலையில் அடிக்கடி நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை நிரந்தரமாக தீர்க்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். துறை அதிகாரிகள் போக்குவரத்து எளிதாக நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: