தொடர் மழை மேலும் நீடிப்பு குடியிருப்பு,வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீர் தூக்கமின்றி தவிக்கும் மக்கள்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.4: மாவட்டம் முழுவதும் நேற்றும் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. உணவு தயார் செய்ய முடியாதல் மக்கள் அவதிப்பட்டனர். சாலைகளில் அரிப்பு ஏற்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக திருப்பாலைக்குடி காந்திநகர், கிழக்கு மீனவர் காலனி உள்பட பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல் தேங்கி குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் நோய் அச்சத்துடனே உள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் குடிதண்ணீருக்கு கூட கஷ்டப்பட்டோம். இந்த ஆண்டு மழை பெய்து தண்ணீர் பிரச்னை தீர்ந்து விடும் என்ற சந்தோசத்தில் இருந்தோம். ஆனால் அளவுக்கு அதிகமாக மழை பெய்வதாலும் சரியான வடிகால் வசதி இல்லாததாலும் பல பகுதிகளில் தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. இதனால் குழந்தைகளையும், வயதான முதியோர்களையும் வைத்துள்ள எங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. சில வீடுகளில் தண்ணீர் சுவர்கள் வரை தேங்கி கிடப்பதால், சுவர் இடிந்து விடுமோ என்ற பயத்துடன் இருக்க வேண்டியுள்ளது. ஆகையால் மழை நீரை உடனே அகற்றும் விதமாக மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மாவட்டத்தில் அதிகமான மிளகாய் விவசாயம் செய்யும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கூடுதலாக கனமழையாக பெய்து வருகின்றது. இதனால் இப்பகுதியில் பயிரிட்டுள்ள நெற்பயிர்,மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி விட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தொண்டியில் குளம் மற்றும் கண்மாய்கள் தண்ணீர் நிறைந்து வெளியேறி வருவதால், தெருவில் உள்ள தண்ணீரும் சேர்ந்து வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து விட்டது. தொண்டி அருகே நம்புதாளை மறவர் தெரு, படையாச்சி தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளும், கிழக்கு கடற்கரை சாலையில் சோலியக்குடியில் அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பேரிகாட் வைக்கப்பட்டது.

தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நம்புதாளை ஊராட்சி சார்பில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வழக்கத்திற்கு மாறாக கடல்நீர் உள்ளே சென்றுள்ளதால் மீனவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

திருப்புல்லாணி இந்திரா நகரில் சுமார் 120க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் மழைநீர் தேங்கி வீட்டிற்குள் புகுந்தது. இதனால் தூங்க முடியாமல் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்தனர். இதை அதிகாரிகள் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள அரசு கலையரங்கில் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதுகுறித்து செல்லம்மாள் கூறுகையில், எங்களது வீடுகளை விட்டு விட்டு இங்கு தங்கி இருப்பதால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது. ஆகவே கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு எங்கள் வீட்டு பகுதியில் உள்ள மழை தண்ணீரை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: