பரமக்குடி நகர் பகுதியில் பணியில் இல்லாத போலீசாரால் கடும் போக்குவரத்து நெரிசல்

பரமக்குடி, டிச.4: பரமக்குடி நகரானது மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய நகரமாக உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர் அதிகளவில் வியாபாரம் மற்றும் அரசு சார்ந்த பனிகளுக்கு வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் செல்லும் வழியாக இருப்பதால் சுற்றுலா வாகனங்கள் அதிகம் வந்து செல்கிறது. இதனால் அடிக்கடி மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஓட்டபாலம், ஆற்றுப்பாலம், பெரியகடை வீதி, கிருஷணா தியேட்டர், ஓட்டபாலம் (இளையான்குடி சாலை வளைவு), நகர் காவல் நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் பல நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காலை,மாலை வேளைகளில் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் சென்று வருவதால் தவிர்க்க முடியாத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதனை சரி செய்ய வேண்டிய போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் ஐந்துமுனை மற்றும் பஸ் ஸ்டாண்டு பகுதியில் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மைக் கொடுத்திருப்பதால் சாலையில் நின்று போக்குவரத்தை சரி செய்யாமல், அருகிலுள்ள கடைகளில் அமர்ந்து கொண்டு போக்குவரத்தை கட்டுப்படுத்தி வரும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளான ஓட்டபாலம், ஆற்றுபாலம், கிருஷ்ணா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: