சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு கமுதியில் மின்வாரிய கட்டிடத்தை சூழ்ந்த மழைநீர் ஊழியர்கள், பொதுமக்கள் அவதி

கமுதி, டிச.4: கமுதியில் உள்ள மின்வாரிய கட்டிடத்தை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில், அரசு மருத்துவமனை அருகே உதவி மின் பொறியாளர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சாலையில் இருந்து தாழ்வான பகுதியில் இக்கட்டிடம் அமைந்துள்ளது. கட்டிடம் சேதமான நிலையில் மழைநீர் அலுவலகத்திற்குள் ஒழுகுவதால் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் அலுவலகத்தை சுற்றிலும் மழைநீர் நீண்ட நாட்களாக தேங்கியே நிற்கிறது. இதனால் மின்சார கட்டணம் செலுத்த வரும் நகர் மற்றும் கிராமப்புற மக்கள அனைவரும் முழங்கால் தண்ணீரில் நடத்துதான் உள்ளே வரவேண்டிய நிலை உள்ளது.இது மட்டுமல்லாமல் மின்சாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு பணிகளுக்கு வருபவர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைநீர் நீண்ட நாட்களாக தேங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இருந்து வருகிறது. இதன் அருகே அரசு மருத்துவமனை உள்ளதால் நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகளுக்கு மிகவும் பேராபத்தை விளைவிக்கும் கொடிய நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இக்கட்டிடத்தை சுற்றிலும் கருவேல மரம் அடர்ந்து காணப்படுவதால், விஷ பூச்சிகளின் தொல்லை காணப்படுகிறது.இதனால் அச்சத்துடன் பணியாளர்களும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். எனவே பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்தும், மழைநீர் தேங்காமலும், அடர்ந்த கருவேல மரங்களை அப்புறப்படுத்திடவும் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: