கொடைரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைவில் வேண்டும் இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிக்க திட்டம்

வத்தலக்குண்டு, டிச. 4: கொடைரோடு மேற்கு பகுதியில் ஜெகநாதபுரம், ரயில்வே காலனி, அம்மாபட்டி, உச்சினம்பட்டி, பொம்மனம்பட்டி, நரியூத்து உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் ஏராளமான ரயில்கள் செல்வதால் கால் மணிநேரத்திற்கு ஒருமுறை ரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. மேலும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரயில்வே கேட் திறப்பதற்கு அதிக நேரம் ஆகிறது. இதனால் அலுவலகத்திற்கு செல்பவர்களும், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளும் தாமதமாக செல்லும் நிலைமை ஏற்படுகிறது. மேலும் அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்களும் காத்திருக்க வேண்டியுள்ளது.எனவே இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைவில் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க 20 கிராமமக்களும் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர் தங்கராஜ் கூறுகையில், ‘‘கொடைரோடு நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கோ, ரயில் நிலையத்திற்கோ, மார்க்கெட்டுக்கோ நினைத்த நேரத்தில் போக முடிவதில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் உள்ளாட்சி தேர்தலை மக்கள் புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை’ என்றார்.

Related Stories: