திருப்பூர், பல்லடத்தில் கலப்பட டீ தூள் பறிமுதல்

திருப்பூர், டிச.4: திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு பகுதி மற்றும் பல்லடம் பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகள், பானிபூரி கடைகள், பெட்டிக் கடைகள், ஆவின் பூத் மற்றும் டாஸ்மாக் கடை என மொத்தம் 36 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளில் இருந்த கெட்டு போன 3 கிலோ காய்கறிகள், 6 கிலோ கலப்பட டீ தூள், 6 லிட்டர் ஜூஸ் வகைகள், தயாரிப்பு தேதி மற்றும் லேபிள் இல்லாத 18 கிலோ தின்பண்டங்கள், 7 கிலோ அழுகிய பழங்கள், 3 லிட்டர் பாய்லர் மேல் சூடு செய்த பாக்கெட் பால், 4 கிலோ தடை செய்யப்பட்ட பாலீத்தீன் பைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காத 7 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்து வரும் கடை உரிமையாளர்களுக்கு உடனடியாக உரிமம் எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: