உக்கடம் வாலாங்குளக்கரையில் அழுகிய ஆகாய தாமரையால் நாற்றம்

கோவை, டிச.4:  கோவை வாலாங்குளத்தின் கரையில் குவிக்கப்பட்டு அழுகி கிடக்கும் ஆகாய தாமரையால் துர்நாற்றம் அதிகரித்துள்ளது. கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஆகாய தாமரை அகற்றும் பணி நடக்கிறது. குளத்தின் மேற்கு பகுதியில் சுமார் 300 டன் அளவிற்கு ஆகாய தாமரைகள் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு கரைகளில் குவிக்கப்பட்டது. 2 மாதமாகியும் இந்த ஆகாய தாமரை கழிவுகள் அப்புறப்படுத்தப்படவில்லை. கரையில் கிடந்த அழுகிய கழிவுகள் மீண்டும் குளத்திற்கு சரிந்து விழுந்து கிடக்கிறது. கழிவுகளால் அந்த பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆகாய தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக ரயில் பாதை அருகே ஆகாய தாமரைகள் அதிகளவு உள்ளது.  இவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகாய தாமரைகளை அகற்றி கரையில் போட்டால் அந்த கழிவுகளில் உள்ள விதைகள் மூலமாக மீண்டும் புதிதாக ஆகாய தாமரைகள் முளைத்து வேகமாக வளர்ந்து விடும். அகற்றிய ஆகாய தாமரைகளின் அளவு குறையவேண்டும் என்பதற்காக கரைேயாரம் அழுகும் வரை அப்படியே விட்டு விடுவது வழக்கமாகி விட்டது. அழுகிய ஆகாய தாமரைகளை அகற்றினாலும் குளத்தில் ஓரிரு மாதத்தில் அதிகளவு ஆகாய தாமரைகள் படர்ந்து விடும். பல கோடி ரூபாய் செலவில், பல முறை ஆகாய தாமரை அகற்றுவது தேவையில்லாத வேலை. குளத்தின் கரையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்த பின்னர் ஆகாய தாமரைகளை அகற்றவேண்டும். கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஆகாய தாமரை அகற்றுவதால் எந்த பயனும் இல்லை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: