பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பில் தொகை உடனே வேண்டும்

கோவை, டிச.4: பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனத்தினரிடம் இருந்து குறுந்தொழில் நிறுவனங்களின் பில் தொகைகள் உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோயமுத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர்கள் சங்கத்தினர் (காட்மா) மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து மத்திய நிதியமைச்சருக்கு காட்மா சங்க தலைவர் சிவகுமார் அனுப்பிய  மனுவில் கூறியிருப்பதாவது: பொருளாதார மந்தநிலை மற்றும் நிதி நெருக்கடி போன்ற காரணங்களை கூறி குறுந்தொழில் முனைவோர்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கும் பெரிய நிறுவனங்கள், குறுந்தொழில் முனைவோர்கள் தாங்கள் செய்து கொடுத்த வேலைக்கான பில்தொகையை கொடுப்பதற்கு 120 முதல் 150 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்துவதால், குறுந்தொழில் முனைவோர்கள் ஜிஎஸ்டி தொகையைக் கட்டுவதற்கு தாமதமாகிறது.

எனவே குறுந்தொழில் முனைவோர்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கும் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதற்குண்டான பில்தொகையை, பில் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாடிக்கையாளரிடம் இருந்து பில் தொகை கிடைப்பதற்கு தாமதம் போன்ற பல்வேறு நியாயமான காரணங்களால் இதுவரை ஜிஎஸ்டி தொகையை செலுத்தமுடியாமல் இருந்து, தற்போது ஜிஎஸ்டி செலுத்துவதற்கு தயாராக இருக்கும் குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு அந்த ஜிஎஸ்டி

தொகையினை, எந்தவிதமான அபராதமும், வட்டியும் இன்றி 5தவணைகளாக செலுத்துவதற்கு அனுமதித்து நெருக்கடியில் இருக்கும் தொழில் முனைவோர்களை காப்பாற்றி அவர்கள் மீண்டும் தங்களது தொழிலைதொடர்ந்து நடத்த உதவி செய்ய வேண்டும்.

தொழில் முனைவோர்கள் ஆறுமாதங்களுக்குள் ஜிஎஸ்டி தொகையை செலுத்தாவிட்டால் அந்த தொழில்முனைவோரது ஜிஎஸ்டி கணக்கு வணிகவரித்துறையால் முடக்கப்படுகிறது.  ஜி.எஸ்.டி தொகையை செலுத்தினாலும் ஜிஎஸ்டி கணக்கு மீண்டும் நடைமுறைக்கு வருவதற்கு 30 முதல் 45 நாட்கள் ஆகிறது. எனவே ஜிஎஸ்டி கணக்கு முடக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு ஜிஎஸ்டி கட்டிய பின் எவ்விதமான தாமதமும் இன்றி உடனடியாக முடக்கப்பட்ட ஜிஎஸ்டி கணக்கை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து உதவ வேண்டும். மேலும் ஜி.எஸ்.டி கவுன்சலில் தொழில் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இடம் அளித்து தொழில் முனைவோர்கள் சந்தித்து வரும் நிறை குறைகளை நேரடியாக ஜி.எஸ்.டி கவுன்சலில் தெரிவிக்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தொழில்முனைவோர்களை பாதுகாத்து. தங்களது தொழிலை தொடர்ந்து நடத்திட உதவ வேண்டும்.

Related Stories: