16 மணி நேரம் இரட்டை அறுவை சிகிச்சை

ஈரோடு, டிச. 4:  வெளிநாட்டு பெண்ணிக்கு ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. மியன்மார் நாட்டை சேர்ந்தவர் ஹல ஹல செயின் ஷக்கீனார் (69). தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஷக்கீனாருக்கு கல்லீரலுக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக ஷக்கீனாருக்கு வழக்கமான பரிசோதனைகள் செய்தபோது, இதயத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

முதுமை மற்றும் உடல் எடை 100 கிலோவை தாண்டி இருந்ததால், பல நாட்டு மருத்துவர்களும் ஷக்கீனாருக்கு அறுவை சிகிச்சை செய்யும் முடிவை கைவிட்டனர். இதையடுத்து சென்னை வந்த ஷக்கீனார் சென்னை செட்டிநாடு மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கார்த்திக் மதிவாணனிடம் தனது உடல்நிலை குறித்து விளக்கினார்.

இதையடுத்து கல்லீரல் மாற்று மற்றும் இதய அடைப்பு என இரண்டு அறுவை சிகிச்சைகளும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து உலவியியல் ரீதியாக தன்னம்பிக்கை அளிக்கும் பணியை முதலில் தொடங்கினார். பின்னர் உணவு பழக்க வழக்கங்கள், நடை பயிற்சி வழங்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக தயார் படுத்தப்பட்டார். இதையடுத்து டாக்டர் கார்த்திக் மதிவாணன் தலைமையில் இதய அறுவை சிகிச்சை டாக்டர் சஞ்சய் தியோடார் ஆகியோர் அறுவை சிகிச்சை பணிகள் மேற்கொண்டனர். இது குறித்து டாக்டர் கார்த்திக் மதிவாணன் கூறியதாவது:

ஷக்கீனருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய சவாலான சூழல் எங்களது மருத்துவ குழுவினருக்கு ஏற்பட்டது.

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், உலகத்தரம் வாய்ந்த கட்டுமானம், சாதனங்கள் இருந்ததால், தொடர்ந்து 16 மணி நேரம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் உயிருடன் இருக்கும் ஒரு நபரிடமிருந்து கல்லீரல் கொடையாக பெற்று மற்றொருவருக்கு பொருத்துவது, தென்னிந்தியாவில் இதுவே முதன்முறையாகும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதையடுத்து விரைவில் மூதாட்டி ஷக்கீனார் மியன்மார் செல்ல உள்ளார். இவ்வாறு டாக்டர் கார்த்திக் மதிவாணன் கூறினார்.

Related Stories: