அடிப்படை வசதி செய்யாததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க புதுகை போஸ்நகர் மக்கள் முடிவு

புதுக்கோட்டை, டிச.4: அடிப்படை வசதி செய்யாததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க புதுக்கோட்டை போஸ் நகர் 4ம் வீதியில் உள்ள பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட போஸ் நகர் 4-ம் வீதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் முறையாக சாலை வசதி இல்லாததால் போஸ்நகர் பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்து உள்ளது.

இது குறித்து நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பியும், நகராட்சி அதிகாரிகள் இதுவரை வந்து பார்க்கவில்லை எனக்கூறப்படுகிறது. மழைநீர் தேங்கி உள்ள வீடுகளின் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியில் பொதுமக்கள் வருகிற உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் இந்த பகுதியில் உள்ளவர்கள் வாக்களிக்க மாட்டோம். நாங்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம். எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தந்தால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் வாக்களிப்போம் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அறிவித்து உள்ளனர்.

Related Stories: