காரைக்கால் கலெக்டர் அதிரடி பள்ளி, கல்லூரி அருகே விற்கப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 18 பேர் கைது

காரைக்கால், டிச.4: காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரி அருகே விற்கப்பட்ட, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அதிரடி உத்தரவால் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து 18 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரி அருகில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கட்டுப்பாடின்றி விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து காவல்நிலைய போலீஸார் கலந்து கொண்ட அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில், கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, துணை கலெக்டர் ஆதர்ஷ் தலைமையில், அந்தந்த காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகள் அருகே போலீசார் நேற்று இரவு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 16 கடைகளில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா கூறுகையில், காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரி அருகில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கட்டுப்பாடின்றி விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் இனி தொடர்ந்து திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள். பொதுமக்கலும் இது போன்ற விற்பனை நடைபெறும் இடங்களை போலீசாரிடம் தெரிவிக்கலாம். முக்கியமாக, இது போன்ற போதை பொருட்கள் விற்பதை வியாபாரிகள் தாமாக முன்வந்து கைவிடவேண்டும். மீறி இனி இது போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் மற்றும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

Related Stories: