நாகையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 5 ஷேர் ஆட்டோ பறிமுதல்

நாகை,டிச.4: நாகையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற 5 ஷேர் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

நாகையில் இருந்து நாகூருக்கு தினந்தோறும் ஏராளமான ஆட்டோ, கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது. நகர பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக ஷேர் ஆட்டோக்கள் உள்ளது. மேலும் நினைத்த இடத்தில் இறங்கிவிடலாம் எனவும் ஷேர் ஆட்டோவில் அதிகம் பயணம் செய்கின்றனர்.

எனவே நாகை நாகூர் பகுதியில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் சென்று வருகின்றனர். இதில் நாகை புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் சில ஆட்டோக்கள், பயணிகளுக்கு இடையூறாக பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் பிரவீன் பி நாயர் உத்தரவின்பேரில் நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பஸ் நிறுத்தும் இடம், போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற ஆட்டோக்கள், ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, தகுதி சான்று உள்ளிட்டவைகள் இல்லாமல் இயக்கப்பட்ட 5 ஷேர் ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஆய்வின்போது மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: