திருவாரூர் மத்திய பல்கலை.யில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன?

திருவாரூர், டிச.4: திருவாரூர் மத்திய பல்கலை. மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தாததால் மர்மம் நீடிக்கிறது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீஸ் விசாரணை நடத்தாதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த முரளி- லலிதா பிரியா தம்பதியின் மகள் மைதிலி(19). இவர் திருவாரூர் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி பிஎட் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு விடுதி அறையில் மைதிலி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நன்னிலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர் வந்த பிறகு தான் மைதிலி தற்கொலைக்கான காரணம் பற்றி, தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில் 1ம் தேதி மதியம் மைதிலியின் பெற்றோர் வந்து, சடலத்தை பெற்றுக்கொண்டு ஊருக்கு சென்று விட்டனர்.

மைதிலியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் மனு எதுவும் அளித்தனரா, அப்படி அளித்திருந்தால் அந்த மனுவில் என்ன கூறப்பட்டிருந்தது என்ற விவரங்களை கூற போலீசார் மறுத்து விட்டனர். மேலும் தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் சக மாணவர்களிடமோ, பல்கலைக்கழக நிர்வாகத்திடமோ இதுவரை விசாரிக்க வில்லை. மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, தற்கொலை செய்த மைதிலியிடம் ஒரு தங்க பிரேஸ் லெட் இருந்தது. அதில் ஒரு ஆணின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பிரேஸ்லெட் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மைதிலியின் பெற்றோர் தெரிவித்து விட்டனர். எனவே உடன் படிக்கும் சக மாணவரின் பெயராக இருக்கலாம். காதல் விவகாரத்தில் மைதிலி தற்கொலை செய்திருக்கலாம். பிரேஸ் லெட்டில் உள்ள பெயரில் பல்கலைக்கழகத்தில் 5, 6 மாணவர்கள் உள்ளனர். அனைவரையும் விசாரிப்பது சிரமம்.

அப்படியே விசாரித்தாலும் விசாரிக்கப்பட்ட மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். எனவே இப்போதைக்கு விசாரணை எதுவும் நடத்தவில்லை. மைதிலியின் தற்கொலைக்கு காரணத்தை அறிய உரிய நேரத்தில் விசாரணை நடத்துவோம் என்றனர்.

Related Stories: