பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

செங்கல்பட்டு, டிச.4: செங்கல்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா. இவர்களுக்கு ஒரு மகளும், ஆகாஷ் (13) உள்பட 2 மகன்கள் உள்ளனர். ஆகாஷ், பாலூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை ஆகாஷ், தனது நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறி, வீட்டில் இருந்து சென்றான். மாலை நீண்டநேரமாகி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து பாலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், பாலாற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு ஆகாஷின் கால்சட்டை பணியன் கிடந்தது. உடை காற்றில் பறக்காமல் இருக்க அதன்மீது மீது கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீசார் ஆகாஷுடன் விளையாடும் மாணவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், ஆகாஷுடன் 4 பேர் பாலூர் பாலாற்றில் குளிக்க சென்றோம்.  அங்கு, ஆகாஷ் திடீரென தண்ணீரில் அடித்து சென்றான். இதனால் பயந்து போன மற்ற சிறுவர்கள், வீட்டில் தெரிவிக்கவில்லை என கூறினர். இதையடுத்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் இரவு முழுவதும் படகில் ஆகாஷை தேடி, நேற்று காலை 8 மணியளவில் மணல் புதைகுழியில் இருந்து சடலமாக மீட்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* மதுராந்தகம்: மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு மதுராந்தகம் சுற்றுப்பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார், மேற்கண்ட பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, மதுராந்தகம் அடுத்த ஜல்லிமேடு கிராமத்தை சேர்ந்த முருகன் (40), புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரிந்தது. அவர் கள்ள சாராய விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். இதேபோல் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (53), புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

* ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த, பழந்தண்டலம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்தி (17). தர்காஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது நண்பர்கள் சோமங்கலம் சஞ்ஜய் (18), ஜெயப்பிரகாஷ் (17) பழந்தண்டலம் ஹரி (17), நடுவீரப்பட்டு ரிஸ்வான் (17), சித்திக் (17), முகம்மது பயஸ் (16), மேட்டூர் ராஜ்குமார் (18), காந்தி நகர் முகமது ஆஷிர் (17) ஆகியோருடன், நேற்று முன்தினம் சோமங்கலம் ஏரியை சுற்றிப்பார்க்க சென்றனர்.

அப்போது, அங்கிருந்த மீன்படி படகில் 9 பேரும் ஏரிக்குள் சென்றனர். படகை திருப்பும்போது கார்த்தி, சஞ்ஜய் ஆகியோர் ஏரியில் தவறி விழுந்தனர். இதில், கார்த்தி தண்ணீரில் மூழ்கினான். சஞ்ஜய் நீந்தி வந்தபோது, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். பின்னர், படகில் இருந்த 7 பேரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். ஆனால், தண்ணீரில் மூழ்கிய கார்த்தியை மீட்க முடியவில்லை.

தகவலறிந்து சோமங்கலம் போலீசார், தாம்பரம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, ஏரியில் மூழ்கிய கார்த்தியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. 2வது நாளாக ேநற்று காலை முதல் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் தேடினர்.

இதுபற்றி அறிந்த ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் அங்கு சென்று, கார்த்தியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, மீட்பு பணியை தீவிரப்படுத்தும்படி அறுவுறுத்தினர்.

* உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த புத்தளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40). கூலித் தொழிலாளி. நேற்று சுரேஷ், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு உத்திரமேரூர் சென்றார். அங்கு, பொருட்கள் வாங்கி கொண்டு மீண்டும் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார்.

அந்த நேரத்தில், எதிரே உத்திரமேரூர் நோக்கி நல்லூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (55) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில் 3 கண் என்னுமிடத்தில் எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தூக்கி வீசப்பட்ட 2 பேரும், படுகாயமடைந்தனர்.

தவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் மீட்டு உத்திரமேரூர் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் சாலையை சேர்ந்தவர் செல்வம் (53). இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உற்பத்தி மேலாளராக வேலை செய்து வந்தார். நேற்று காலை செல்வம், வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஆனால், அவரை காணவில்லை. இதனால், ஊழியர்கள் அவரை தேடினர்.

அப்போது தொழிற்சாலையின் ஒரு பகுதியில் செல்வம், தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்யிடைந்தனர்.

தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.

இதற்கிடையில், போலீசாரின் விசாரணையின்போது, செல்வம் அணிந்திருந்த சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், தொழிற்சாலையில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.

தொழிற்சாலை நிர்வாகம் 1.78 லட்சம் கொடுக்காமல், தொழிற்சாலை துணை தலைவர் ராஜன் இழுத்தடித்து வந்தார். இதனால் கடன் தொல்லை அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவு எடுத்தேன்.

என் சாவுக்கு தொழிற்சாலை துணைத் தலைவர் ராஜன், தொழிற்சாலை ஊழியர் மனோகர் ஆகியோர் தான் காரணம். நான் இறந்த பிறகு எனக்கு சேர வேண்டிய பணத்தை என் குடும்பத்துக்கு பெற்று தர வேண்டும் என எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதை அறிநத்ததும், அவரது உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

அங்கு, சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களிடம் சமாதானம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

தொடர்ந்து போலீசார், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: