கூடுவாஞ்சேரி அருகே சர்வீஸ் சாலையில் 3 நாட்களாக விழுந்து கிடக்கும் புளியமரம்

கூடுவாஞ்சேரி, டிச.4: வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதில், கடந்த 1ம் தேதி இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தபோது, திடீரென வீசிய சூறைக்காற்றில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கூடுவாஞ்சேரி அடுத்த சீனிவாசபுரம் சர்வீஸ் சாலையோரத்தில் இருந்த சுமார் 300 ஆண்டு புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், யாரும் வரவில்லை. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர், தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கிளைகளை மட்டும் வெட்டி அகற்றிவிட்டு, சர்வீஸ் சாலையில் விழுந்த மரத்தை அகற்றாமல் போட்டுவிட்டு சென்றனர்.

மரம் விழுந்து 3 நாட்கள் ஆகியும் இதுவரை அகற்றவில்லை. இதுபற்றி நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், அப்பகுதியில் எதிரும், புதிருமாக செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: