வாலாஜாபாத் பேரூராட்சியில் டயர், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வாலாஜாபாத், டிச.4: வாலாஜாபாத் பேரூராட்சியில், சைக்கிள் டயர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை, பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளருக்கு 2000 அபராதம் விதிக்கப்பட்டது. வாலாஜாபாத் பேருராட்சியின், 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, பஸ் நிலையம், பஜார் வீதி, மார்க்கெட் உள்பட பல பகுதிகளில் உணவகங்கள், சாலையோரக் கடைகள், துணிக்கடைகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தமிழக அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக, பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.  அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் ஊழியர்கள்  வாலாஜாபாத் பஸ் நிலையம், ராஜவீதி உள்பட பல கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது, பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் உணவகங்கள், துணி கடைகள், தள்ளுவண்டி கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட சுமார் 4 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இதுபோன்று பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது மீறினால் சட்ட ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

தொடர்ந்து ராஜவீதி வால்பட்டறை பகுதியில் உள்ள டயர் கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது சுகாதார சீர்கேடு எற்படும் நிலையில் பழைய டயர்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பழைய டயர்களை பறிமுதல் செய்தனர். நேற்று நடத்திய அதிரடி சோதனையின்போது, கடை உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாலாஜாபாத் பேரூராட்சி ராஜவீதி பஸ் நிலையம் உள்பட பல பகுதிகளில் தனியார் உணவகங்கள், கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என அடிக்கடி அதிரடி சோதனை நடத்தினால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க முடியும் என்றனர்.

Related Stories: