வீராணம் ஏரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அடித்துசெல்லப்பட்ட கட்டு மரங்கள்

சேத்தியாத்தோப்பு, டிச. 4: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் துவங்கி சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி வரை 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளது. இந்த ஏரியை நம்பி சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை நீரானது கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, வெண்ணங் குழிவாய்க்கால் ஆகிய பகுதிகள் வழியாக வடவாற்றில் விழுந்து வடிகாலாகி வீராணம் ஏரியில் கலந்தது. தற்போது ஏரி கொள்ளளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்ததால் பூதங்குடி விஎன்எஸ் மதகு வழியாக 2554 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது. இது தவிர சென்னை மெட்ரோ வாட்டருக்கு 74 கன அடி தண்ணீர் செல்கிறது. தண்ணீர் செல்லும் வேகம் அதிகரித்தால் வீராணம் ஏரியை ஒட்டியுள்ள கிராம பகுதியான மழவராயநல்லூர், குமாரக்குடி, பூதங்குடி, பரிபூரண நத்தம், வாழக்கொல்லை, நங்குடி, கோதண்டவிளாகம், கூளாப்பாடி, தென்பாதி, கந்தகுமாரன் ஆகிய கிராமங்களை சேர்ந்த உள்நாட்டு மீனவர்களின் கட்டு மரங்கள் நேற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் உள்நாட்டு மீனவர்கள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, ஏற்கனவே ஏரியில் மீன்கள் அதிகளவு கிடைக்காமலும், மீன்வளத்துறையினர் மீன்குஞ்சுகளை விடாமலும், வலைமானியம் வழங்காமலும் எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கி வருகின்றன. இந்நிலையில் கனமழையில் ஏரியில் அடித்து செல்லப்பட்ட கட்டுமரங்களை மீட்க முடியாமல் போய்விட்டது. எனவே மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் பதிவு செய்து உறுப்பினராக உள்ள உள்நாட்டு மீனவர்களை கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்து வலைமானியம், கட்டுமரம் வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறினர்.

Related Stories: