ஆரல்வாய்மொழியில் மனுநீதி திட்ட முகாம் 33 பயனாளிகளுக்கு நலஉதவி

ஆரல்வாய்மொழி,  டிச. 4: ஆரல்வாய்மொழியில் மாவட்ட ஆட்சித் தலைவரின் இரண்டாம் கட்ட மனுநீதி  திட்ட முகாம் நடந்தது. ஆரல்வாய்மொழி அரசு உயர்நிலைப்பள்ளியில் மனுநீதி திட்ட முதல்கட்ட முகாம் அக்.10ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பல துறை  சார்ந்த 63 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களில் 33 பயனாளிகளின் மனுக்கள்  ஏற்கப்பட்டு அவர்களுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரல்வாய்மொழி  வடக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தோவாளை  வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர்  வினைதீர்த்தான் வரவேற்றார். சமூக பாதுகாப்பு துறை தனி  வட்டாட்சியர் திருவாழி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வழங்கல் அதிகாரி சிவகுமார்  கலந்து கொண்டு முதியோர் ஓய்வூதியம் 13 பேருக்கும், விதவை  ஓய்வூதியம் 13 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளில் 2 பேருக்கும்,  கணவரால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம் 3 பேருக்கும், உழவர் பாதுகாப்புத்  திட்ட ஓய்வூதியம் 2 பேருக்கும் என மொத்தம் 33 பயனாளிகளுக்கு ஆணை  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார துறை சார்பில்  இலவச நிலவேம்பு கசாயமும், இலவச கண் சிகிச்சை முகாமும் நடைபெற்றது.  மேலும் சுகாதார துறை சார்பில் பொதுமக்களுக்கு கிடைக்கின்ற நன்மைகள்  பற்றியும், தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு அரசின் மூலம் கிடைக்கின்ற   மானியம் குறித்தும் விளக்கி விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற  வேண்டும் என எடுத்துக்கூறப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தை  வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ஊட்டசத்து உணவு கண்காட்சியில் வைக்கப்பட்டு  இருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆல்வாய்மொழி ஆரம்ப சுகாதார மருத்துவர்  வள்ளியம்மாள், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அன்வர் அலி, சுப்பையா, தோவாளை  வருவாய் ஆய்வாளர் குளோரி, கிராம நிர்வாக அலுவலர்கள் கலைவாணி,  முத்துலெட்சுமி, மணிகண்டன், ரீனா, பவானி, மற்றும் பயனாளிகள் மற்றும்  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: