ஆசிய அளவிலான ஆணழகன் போட்டியில் தங்கம் குமரி கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா

நாகர்கோவில், டிச. 4: நாகர்கோவில் அனந்தனார் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(17). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆணழகன் போட்டியில் ஒரு பிரிவான பெர்முடா பீச் மாடல் பிரிவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பெங்களூரில் ஆசிய அளவில் 48 நாடுகள் கலந்து கொண்ட பெர்முடா பீச் மாடல் போட்டியில் மாணவர் கார்த்திகேயன் கலந்து கொண்டார். இதில் அவர் தங்கபதக்கம் பெற்றார். அவருக்கு ரொக்க பரிசு ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவர் கார்த்திகேயன் சொந்த ஊருக்கு நேற்று வந்தார். அவருக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை சமூக ஆர்வலர் கபிலன் தலைமையில் ஆசாரிபள்ளம் அனந்தனார் ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பரிசு பெற்ற மாணவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். பின்னர் மாணவர் கார்த்திகேயனை வரவேற்று ஊருக்கு அழைத்துச்சென்றனர்.

 இது குறித்து மாணவர் கார்த்திகேயன் கூறியதாவது: பெர்முடா பீச் மாடல் பிரிவு போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் 3 பரிசுகளையும், மாநில, தேசிய அளவில் பரிசுகளை பெற்றுள்ளேன். பெங்களூரில் நடந்த ஆசிய அளவிலான பெர்முடா பீச் மாடல் போட்டியில் 48 நாடுகளில் இருந்து 300 பேர் கலந்து கொண்டனர். இதில் பெர்முடா பீச் மாடல் ஜூனியர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். அடுத்த கட்டமாக சர்வதேச அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளேன். அதிலும் தங்கம் வெல்வேன் என்றார்.

Related Stories: