மும்பை, ஹவுரா ரயில்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய எல்எச்பி பெட்டிகளை அபகரிக்கும் கேரளம் குமரி பயணிகள் கொந்தளிப்பு

நாகர்கோவில், டிச.4: நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் 2 ரயில்கள், கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நவீன எல்எச்பி புதிய பெட்டிகளை கேரளா, திருவனந்தபுரத்தில் இருந்து இயக்க உள்ள ரயில்களுக்கு அபகரித்து கொண்டது பயணிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு மதுரை, ஈரோடு, சேலம், பெங்களூர் வழியாக வாரத்திற்கு 4 நாட்களும், மதுரை, திருச்சி, விழுப்புரம் செங்கல்பட்டு திருத்தணி வழியாக வாரத்தில் இரண்டு நாட்களும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த நாகர்கோவில் -மும்பை, நாகர்கோவில்-மும்பை (திருப்பதி வழி) கன்னியாகுமரி -ஹவுரா ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு எல்எச்பி பெட்டிகள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து 22ம் தேதி 16340 நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் எல்எச்பி பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டது. 16339 மும்பை- நாகர்கோவில் ரயில் நவம்பர் 24ம் தேதி முதல் எல்எச்பி பெட்டிகளை கொண்டு இயக்கப்பட்டது. மேலும் 12666 கன்னியாகுமரி - ஹவுரா ரயில் டிசம்பர் 7ம் தேதி முதலும், 12665 ஹவுரா- கன்னியாகுமரி ரயில் டிசம்பர் 9ம் தேதி முதலும் எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

மேலும் 16352 நாகர்கோவில் - மும்பை ரயில் டிசம்பர் 12ம் தேதி முதலும், 16351 மும்பை - நாகர்கோவில் ரயில் 14ம் தேதி முதலும் புதிய பெட்டிகளுடன் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.இந்த நவீன எல்எச்பி பெட்டிகள் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படுபவை  ஆகும். கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில்களுக்கு மொத்தம் 5 தொகுப்பு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக படிப்படியாக 3 தொகுப்புகள் நாகர்கோவில் வந்தன. இவ்வாறு வந்த பெட்டிகளை அப்படியே பிரித்து 4, 5 பெட்டிகளாக கேரளாவில் இருந்து இயக்கப்படும் ரயில்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகளின் உத்தரவின்படி இங்குள்ள அதிகாரிகள் அதனை செய்கின்றனர்.

மாற்றாக அங்கிருந்து பழைய எல்எச்பி பெட்டிகளை நாகர்கோவிலுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் 3 தொகுப்பு பெட்டிகளில் ஒரு தொகுப்பு முழுவதும் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அதற்கு பதில் திருவனந்தபுரத்தில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு பல ஆயிரம் கி.மீ ஓடிய நிலையில் பல்வேறு பழுதுகள் ஏற்பட்டு பராமரிப்பு பணிக்கு அனுப்ப வேண்டிய பெட்டிகள் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்னள. இதனை பழுது பார்த்து இயக்க வேண்டும் என்று இங்குள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் இந்த பெட்டிகள் சில நாட்கள் இயக்கப்பட்ட பின்னர் மீண்டும் முழு பராமரிப்பு பணிகளுக்காக சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்திற்கு எல்எச்பி பெட்டிகள் முழுக்க முழுக்க பழைய பெட்டிகளாகவே தொடர்ந்து இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

மாற்றான்தாய் மனப்பான்மை

இது தொடர்பாக ரயில் பயணிகள் கூறுகையில், ‘தெற்கு ரயில்வேயில் திருவனந்தபுரம் கோட்டம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள ரயில்களை கழுவி சுத்தம் செய்வதற்காக நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தல். நாகர்கோவிலில் உள்ள இடவசதியை பயன்படுத்தி கேரளா வழியாக செல்லும் ரயில்களை இங்கிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பயன்படாத வகையில் நள்ளிரவு நேரங்களில் இயக்குதல் போன்ற செயல்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்துதல், நிதி ஒதுக்கீடுகளை திருவனந்தபுரம் கோட்ட பிற ரயில் நிலையங்களுக்கு திருப்பி விடுதல் போன்றவையும் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது எல்எச்பி பெட்டிகளில் புதியவற்றை எடுத்துவிட்டு பழைய பெட்டிகளை குமரி மாவட்ட பயணிகளுக்காக ஒதுக்கியுள்ளனர். இந்த பெட்டிகள் முழுக்க முழுக்க குமரி மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் மற்றும் தமிழக பயணிகள் பயன்படுத்தும் பெட்டிகள் ஆகும். அத்துடன் இந்த ரயில்கள் கேரளா வழியாக செல்வது இல்லை என்பதால் பழைய தேய்ந்து போன பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளனர். இந்த பெட்டிகள் அடிக்கடி பழுது பார்க்க வேண்டி வரும் என்பதுடன் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்குவதிலும் சிக்கல்கள் ஏற்படும்’ என்றும் பயணிகள் தெரிவித்தனர்.

Related Stories: