நெற்பயிரை தாக்கும் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை

அரியலூர், டிச. 3: நெற்பயிரில் ஆனைக்கொம்பன் தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக நெல்லில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஈ வகையை சார்ந்த இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல் சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இந்த ஈ இருந்தால் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் தோன்றும். கிளைப்புகள் வெண்மையாகவோ அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவோ குழல் போன்று வெங்காய இலையை போல தோன்றும். இதை பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்று இருப்பதால் இதை ஆனைக்கொம்பன் என்றழைப்பர். தாய் ஈக்கள் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படும். இந்த பூச்சிகள் சராசரியாக 150 முட்டைகள் வரை இலைகளில் இடும். தாள்களின் மேல்புறமும், தேங்கிய தணணீரிலும் இடும். இதன் வாழ்க்கை சுழற்சி 20 முதல் 25 நாட்களாகும். இதிலிருந்து வெளியாகும் புழுக்கள் நெற்பயிர்களின் குருத்துகளை துளைத்து குழல்களாக மாற்றி விடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் தான் இந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும்.

இதை கட்டுப்படுத்த அறுவடை செய்த பின்பு நிலத்தை உடனடியாக உழவு செய்ய வேண்டும். வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஆனைக்கொம்பன் ஈக்கு எதிர்ப்பு திறனுடைய குறுகியகால ரகங்களான ஏடிடி- 39, மதுரை- 3 ஆகியவற்றை நடவு செய்ய வேண்டும்.  ஆனைக்கொம்பனை கட்டுப்படுத்த பிளாட்டிகேஸ்டர் ஒரைசே என்னும் புழு ஒட்டுண்ணிகள் கொண்ட தூர்களை சேகரித்து 10 சதுர மீட்டருக்கு 1 என்ற அளவில் வயலில் இட வேண்டும். ஈ தாக்குதல் (10 சதவீதம்) பொருளாதார சேதநிலையை தாண்டினால் தயோமீதாக்ஸாம் 25 டபூள்யூஜி - 40 கிராம், கார்போசல்பான் 25ஈ.சி - 400 மி.லி, பிப்ரோனில் 5 எஸ்.சி - 500 கிராம், குளோர்பைரிபாஸ் 20ஈ.சி - 500 மி.லி ஆகிய ரசாயனக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தும் கட்டுப்படுத்தலாம். விவசாயிகளுக்கு ஆலோசனை மருத்துவமனையை வெள்ளநீர் சூழ்ந்ததால் அதனால் தொற்றுநோய் பாதிக்காதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: