அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கல்லாற்றில் வெள்ள பெருக்கு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது

பெரம்பலூர், டிச. 3: கல்லாற்றில் பெருகிய வெள்ள பெருக்கால் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்ட கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்து உள்ளே புகுந்தது. இதையடுத்து 27 நோயாளிகள் உள்பட 71 பேர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பச்சைமலையில் சேலம் மாவட்டம், வேப்படி, பாலக்காடு கிராமங்கள் உள்ள மலை கிராமங்களில் இருந்து மலையாளப்பட்டி சின்னமுட்லு மலை பகுதி வரை மலையின் மேலே கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக மலையிலிருந்து வழிந்து வந்த நீரால் சில நாட்களுக்கு முன் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் வேப்படி பாலக்காடு மலை பகுதிகளில் நேற்றிரவு நள்ளிரவு துவங்கி அதிகாலை 4 மணி வரை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கல்லாற்று வெள்ளப்பெருக்கை போல தூதனாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரு ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஆக்ரோஷமாக கால்லாறாகவே தொண்டமாந்துறை, வெங்கலம் வழியாக கிருஷ்ணாபுரத்தை கடந்து சென்றது. ஆற்றோர ஆக்கிரமிப்பு, புதர்கள் மண்டியதை சீரமைக்காததால் ஆற்றின் கரைகளை கடந்து வயல்களில் புகுந்தும் சாலையில் உள்ள பாலங்களுக்கு மேலே ஆர்ப்பரித்தபடியும் சென்றன.

இதனால் கிருஷ்ணாபுரத்துக்கு வந்தபோது கல்லாற்று நீர் நேற்று அதிகாலை பெரம்பலூர்-ஆத்தூர் சாலையோரம் உள்ள அரசு மருத்துவமனையை சூழ்ந்ததுடன் உள்ளேயும் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மருத்துவ மனையை விட்டு வெளியேற முடியாமலும், உள்ளிருக்க அச்சப்பட்டும் அலறி சத்தமிட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலர் (பொ) தாமோதரன் உத்தரவின்பேரில் நிலைய அலுவலர் சத்தியவர்த்தனன், முன்னணி தீயணைப்பாளர் ராமன் உள்ளிட்ட குழுவினர் விரைந்து சென்று கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த 27 நோயாளிகள், 6 செவிலியர்கள், 8 மருத்துவ பணியாளர்கள், நோயாளிகளின் உறவினர்கள் 30 பேர் என மொத்தம் 71 பேர்களை கயிறுகளை கட்டியும், தூக்கி கொண்டும் வந்து பாதுகாப்பாக மீட்டனர்.

இதில் கர்ப்பிணி பெண் உள்பட உள்நோயாளிகள் 7 பேர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சையை தொடர்வதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதைதொடர்ந்து அருகிலுள்ள சமுதாய கூடத்தில் புறநோயாளிகளுக்கான சிகிச்சையை தொடர்ந்து அளிக்க தற்காலிக அரசு மருத்துவமனை வசதிகளை கலெக்டர் சாந்தா உத்தரவின்பேரில் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளவரசன் மற்றும் டாக்டர்கள் செய்திருந்தனர். மேலும் மருத்துவமனையை வெள்ளநீர் சூழ்ந்ததால் அதனால் தொற்றுநோய் பாதிக்காதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: