பெருங்கட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முழுமைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்ட ஆடிட்டோரியம்

செய்யாறு, டிச.3: செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்ட ஓஎன்ஜிசி ஆடிட்டோரியத்தை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா பெருங்கட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென்கழனி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் சுமார் 700 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் காங்கிரஸ் எம்பி எம்.கே.கிருஷ்ணசாமி முயற்சியினால் ஓஎன்ஜிசி (ஆயில் நேட்சுரல் காஸ் கம்ெபனி) உதவியுடன் ₹25 லட்சத்தில் சுமார் 4000 சதுர அடி பரப்பளவில் ஆடிட்டோரியம் அமைப்பதற்கு கட்டிடம் கட்டப்பட்டது. இதையடுத்து, கட்டிடத்தின் உட்பகுதி மற்றும் முகப்பு வாயிலில் பூச்சு வேலைகள் நடத்தப்பட்டது. பின்னர், சில காரணங்களால் தரைப்பகுதியும், இடது மற்றும் வலது புற சுவர்கள் பூசப்படாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, தற்போது உள்ள பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது: பள்ளியில் உள்ள ஆடிட்டோரியம் கடந்த 8 ஆண்டுகளாக கட்டிட பணிகள் முழுமை பெறாமல் உள்ளதை இப்பள்ளியில் பணியாற்றியவர்களிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை.

மேலும், நிறைவு பெறாமல் உள்ள கட்டிட பணிகளை சீரமைக்க யாரை அணுகினால் வேலை நடக்கும் என தெரிந்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சித்து இருப்போம். ஆடிட்டோரியம் முழுமை பெற்றால் பள்ளி சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளும், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளும் ஆடிட்டோரியத்தில் நடத்தலாம். பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகள் இருந்தும் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் நடத்துவதால் மரத்தடியில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றனர். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆடிட்டோரிய கட்டிட பணிகளை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: