திருவண்ணாமலையில் பலத்த மழை அவலூர்பேட்டை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

திருவண்ணாமலை, டிச.3: திருவண்ணாமலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், அவலூர்பேட்டை சாலையில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை காட்டிலும் கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: `திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் மண் குடிசை போன்ற வீடுகளில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் அருகாமையில் உள்ள அரசு பள்ளி மற்றும் கட்டிடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தநிலையில் திருவண்ணாமலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இடையிடையே மழை தூறியது. மதியம் 3 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் திருவண்ணாமலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிநின்றது. மேலும், திருவண்ணாமலை- அவலூர்பேட்ைட சாலையில் மழைநீர் குளம்போல கரைபுரண்டு ஓடியது. இதனால், இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

Related Stories: