ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பைக் மீது மரம் விழுந்து வாலிபர் பலி

அரக்கோணம், டிச.3: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் 5 வீடுகள் இடிந்து விழுந்தது. 6 ஆடுகள் பலியானது. பைக்கில் சென்ற வாலிபர் மீது மரம் விழுந்து பரிதாபமாக இறந்தார். நிவாரண பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், நெமிலி, வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது. பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார். மேலும், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அரக்கோணம் தாலுகா தணிகைபோளூர், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் 2 வீடுகளின் சுவர்கள் மற்றும் நெமிலி தாலுகா அசநெல்லிக்குப்பத்தில் ஒரு வீடு, ஆற்காடு தாலுகா திமிரியில் ஒரு வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. மேலும், வாலாஜா தாலுகா படியம்பாக்கம் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 ஆடு, 4 குட்டிகள் இறந்தது. தகவல் அறிந்த அரக்கோணம் தாசில்தார் ஜெய்குமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜவிஜய காமராஜ் ஆகியோர் பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பைக்கில் சென்றபோது மரம் விழுந்ததில் வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். அரக்ேகாணம் அடுத்த சித்தேரியை ேசர்ந்தவர் சரண்(21), காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை பைக்கில் கம்பெனிக்கு சென்றுகொண்டிருந்தார். சித்தேரி அருகே சென்றபோது மழை காரணமாக சாலையோரம் இருந்த மரம் திடீரென முறிந்து சரண் ஓட்டி சென்ற பைக் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சரணை, பொதுமக்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சென்ைன தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: