வேலூர் சிறையில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்தியதால் துன்புறுத்தப்படும் நளினி, முருகனை வேறு மாநில சிறைக்கு மாற்ற உள்துறைக்கு கடிதம்

நேரில் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி பேட்டி

வேலூர், டிச.1:  வேலூர் சிறையில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்தியதால் தான் டிஐஜி துன்புறுத்தி வருகின்றனர். எனவே தங்களை வேறு மாநில சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நளினி உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக நேரில் சந்தித்த வழக்கறிஞர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி விடுதலை தாமதம், பரோல் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கருணை கொலை செய்யக்கோரி சிறைத்துறை பிரதமருக்கு மனு அனுப்பி விட்டு சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த 28ம் தேதி தொடங்கினார். 3வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் தொடர்ந்தார். இந்நிலையில், நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று வேலூர் சிறைகளில் உள்ள நளினி, முருகனை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 27ம் தேதி நளினி பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நளினி, தன்னையும் தனது கணவரையும் கருணை கொலை செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், ‘கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறோம். இதற்கு முன்பு எங்களுக்கு முன் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது அந்த நம்பிக்கை போய்விட்டது. சிறை அதிகாரிகள் கணவர் முருகனை துன்புறுத்துகிறார்கள். இதை நளினியால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. முருகனுக்கு சிறையில் வழக்கமாக அனுமதிக்கக் கூடிய பொருட்களை கூட அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே இருவரையும் கருணை கொலை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு மனு அளித்துள்ளார். மேலும் இன்று (நேற்று) சிறை அதிகாரிகள் மூலம் மேலும் இரண்டு மனுக்களை நளினி கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நளினி கருணை கொலையை ஆதரித்தும் வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளார். மற்றொரு மனு தமிழக உள்துறை செயலாளருக்கு கொடுத்துள்ளார். அதில் நளினி, முருகனையும் புழல் சிறைக்கு மாற்றம் செய்ய சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சிறையில் தங்களை துன்புறுத்துகிறார்கள் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதை சிறை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை. வேறு சிறைக்கு மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கையும் நிராகரித்துள்ளனர்.

எனவே எங்களை கர்நாடக சிறைக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். முருகனும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு எந்த ஒரு பொருளையும் சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை. அவர் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நலிவுற்று காணப்படுகிறார். அவர் கடந்த 7 ஆண்டுகளாக பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வந்தார். அதை கூட அதிகாரிகள் மறுத்து விட்டனர். முருகன் அறையில் செல்போன் பறிமுதல் செய்ததாக கூறிய குற்றச்சாட்டு பொய்யானது. தனிச் சிறையில் காவலர் பாதுகாப்புடன் இருக்கும்போது எப்படி செல்போன் பயன்படுத்த முடியும். அவரை சந்திக்க உறவினர்களும் வருவதில்லை. நான் அவரை சந்திக்கச் செல்லும்போதும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, நளினி, முருகனை மட்டும் துன்புறுத்த காரணம் என்ன என்று கேட்டதற்கு, சிறையில் முருகன் துன்புறுத்தப்படுவதற்கு முழுக்க முழுக்க சிறை டிஐஜி ஜெயபாரதி தான் காரணம். சிறைக்குள் பல்வேறு வகையான ஊழல்கள் நடந்து வருவதை முருகன் டிஐஜி மீது குற்றம் சாட்டி அரசுக்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அவர் துன்புறுத்தப்பட இதுவும் ஒரு முக்கிய காரணம். ஒரு நாளைக்கு கைதிகளுக்கு சாப்பாடு வழங்குவதில் ₹30 ஆயிரம் ஊழல் நடைபெறுகிறது என்பது முருகனின் குற்றச்சாட்டு. இதில் டிஐஜி தான் லாபம் அடைவதாக முருகன் மனு அளித்தார். இதன் காரணமாகவே அவரை துன்புறுத்துகிறார்கள். டிஐஜி ஜெயபாரதி இதுபோன்று சிறை கைதிகளை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்’ என்றார்.

Related Stories: