திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீபத்திருவிழவையொட்டி பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம்

திருவண்ணாமலை, டிச.1: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்திகை தீபத்திருவிழா குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். டிஆர்ஓ ரத்தினசாமி, ஏடிஎஸ்பி அசோக்குமார், கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கலந்து கொண்ட பொதுமக்கள் தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வெளியூர் போலீசாரால் உள்ளூர் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. பஞ்ச ரதங்களை நகர்த்த கட்டை போடும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும். அவர்களது பணிக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாதவாறு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தீபமலை மீது செல்வதற்கு அரசு கலைக் கல்லூரியில் அனுமதி சீட்டு வழங்கப்படுவதால் 5 கிமீ தொலைவுக்கு பக்தர்கள் சென்று வர வேண்டியுள்ளது. இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சென்று வர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு வசதியாக மலையேறும் பாதையின் மலையடிவாரத்திலேயே அனுமதி சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை நகரில் நகராட்சி சார்பில் வைக்கப்படும் குடிநீர் தொட்டிகளில் குளோரின் அளவு அதிகமாக இருப்பதால், தண்ணீரை குடிக்க முடியாத நிலை உள்ளது. குடிநீருக்கு ஏற்ற வகையில் குளோரின் கலக்க வேண்டும். துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசம் வழங்க வேண்டும்.

தீபத் தரிசனத்தை காண கட்டண பாஸ் வழங்கும்போது உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் திருத்தேர்களுக்கு கட்டை போடும் பணியில் ஈடுபடுபவர்களில் சிலர் காயமடைகின்றனர். இந்த பணியில் ஈடுபடுவதற்காக ₹5 லட்சம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனை ₹10 லட்சமாக உயர்த்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், ‘கார்த்திகை தீபத் திருவிழாவில் விவசாயிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் வரி என்ற பெயரில் பணம் வசூலிப்பவர்கள் மற்றும் கால்நடை சந்தையில் கட்டணம் வசூலிப்பவர்களை கண்டறிந்து குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: