ஆண்டிமடம் பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், நவ. 29: ஆண்டிமடம் பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியகருக்கையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவுக்கு சென்றார். இந்நிலையில் ராஜேந்திரன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது சென்னையில் இருந்து வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு, ரூ.42 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் செல்வராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் போலீசார், கருக்கை பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் ஒருவர் கடலூர் மாவட்டம் முஷ்ணத்தை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (37) என்பதும், மற்றொருவர் அரியலூர் மாவட்டம் பெரியகற்கையை சேர்ந்த பிரபு (எ) ராஜேந்திர பிரசாத் (27) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பெரியகருக்கை ராஜேந்திரன் வீட்டில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் 2 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: