குடிநீர் விநியோகம் கேட்டு மக்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை, நவ.19: இளம்பிள்ளை அருகே சீரான குடிநீர் விநியோகம் கேட்டு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டு, பழக்கார தோட்டம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று  காகாபாளையம்-இளம்பிள்ளை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி எஸ்ஐ துரை சபாபதி மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) மேகநாதன் சம்பவ இடத்திற்கு வந்து, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ச் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு ஆப்ரேட்டராக பணிபுரிபவர் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. அவர் வசதியான நபர்களுக்கு மட்டும், ஒவ்வொரு மாதமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தண்ணீர் எடுத்து விடுகிறார். மற்றவர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில்லை. எனவே, அவரை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்,’ என்றனர்.

Related Stories: