டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

ேசலம், நவ.19: இரும்பாலை அருகே டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், இரும்பாலை அருகே உள்ள கீரபாப்பம்பாடி ஊராட்சியில் இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணி நடந்தது. இதில், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் நேற்று காலை ஓலைப்பட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே ஒரு வீட்டில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றி, குளோரின் பவுடரை தெளித்து கொண்டிருந்தனர்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த கோபால் மகன் கோவிந்தராஜ் என்பவர் அங்கு பணிபுரிந்த பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து பணியாளர்கள் சுகாதார ஆய்வாளர் அம்பழகனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அன்பழகன் இது தொடர்பாக கோவிந்தராஜிடம் கேட்டபோது அவரையும், தகாத வார்த்தைகளால் திட்டி அவருக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து, அன்பழகன் இரும்பாலை போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ மோகன் விசாரணை நடத்தி கோவிந்தராஜ் மீது கொலை மிரட்டல், பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியின் போது பணியாளர்களை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இரும்பாலை பகுதியில் சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: