உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டி

மொடக்குறிச்சி, நவ. 19:   உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டுமென மொடக்குறிச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கொ.ம.தே.க. முடிவு செய்துள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில  இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி கலந்துகொண்டு, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் கொ.ம.தே.க. சார்பில் போட்டியிடுவது குறித்தும் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் கொ.ம.தே.க போட்டியிடுவது எனவும், உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த பதவிகளை கேட்டுப் பெறுவது என்பதை கூட்டணிக் கட்சியுடன் பேசுவதற்கான குழு அமைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்திற்கு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், காலிங்கராயன் பாசன பகுதியில் பணப்பயிர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால் வேளாண் பல்கலைக்கழகம் இப்பகுதியில் அமைக்க வேண்டும். பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தற்போது பெய்து வரும் மழையால் வீணாகும் நீரை சேமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் ஆனந்தன், இணைச் செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி செயலாளர் அம்சகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: