துணி விலை வீழ்ச்சியால் விசைத்தறி தொழில் பாதிப்பு

ஈரோடு, நவ. 19:   ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி தொழில் இருந்து வருகிறது. ஈரோடு மற்றும் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் விசைத்தறி கூடங்களில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. விசைத்தறி மூலமாக நேரடியாக 15 ஆயிரம் பேரும், மறைமுகமாக 30 ஆயிரம் தொழிலாளர்களும் பயன் பெற்று வருகின்றனர். 50 ஆயிரம் விசைத்தறிகளில் 25 சதவீத விசைத்தறி கூடங்களில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. 75 சதவீத விசைத்தறி கூடங்களில் ரேயான் எனப்படும் செயற்கை இழை நூலை கொண்டு தனியாக சொந்த உற்பத்தி செய்து வருகிறோம். கடந்த 3 மாதமாக துணியின் விலை நூலின் அடக்கத்திற்கு குறைவாகவே விற்பனையாகி வருகிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு இடையே தொழில் நடத்தி வருகிறோம்.

ஆனால் கடந்த ஒரு மாதமாக நாங்கள் கொள்முதல் செய்யும் நூலின் விலையைவிட விற்பனை செய்யும் துணியின் விலை மேலும் வீழ்ச்சியடைந்து ஒரு மீட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.3 முதல் ரூ.4 வரை நஷ்டம் ஏற்படுகிறது. எங்களை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு பகுதி நேரமாக வேலை கொடுத்து வருகிறோம். இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள விசைத்தறி தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, எங்களது கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகளின் ஜவுளித்துறை அமைச்சகத்திற்கு ஏற்றுமதியை ஊக்குவிக்க வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

Related Stories: