ஆவின் நிர்வாகம் ரூ.50 கோடி பால் நிலுவைத்தொகை

ஈரோடு,  நவ. 19:   ஈரோடு மாவட்டத்தில் பால் நிலுவை தொகை ரூ.50 கோடி வழங்கப்படாமல்  உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரோடு  அடுத்துள்ள சித்தோட்டில் ஆவின் பால் நிறுவனத்திற்கு மாவட்டத்தில் உள்ள 721  கூட்டுறவு சொசைட்டிகளில் இருந்து நாளொன்றுக்கு 3 லட்சத்து 30 ஆயிரம்  லிட்டர் பால் வந்து கொண்டுள்ளது. உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள பால்  பதப்படுத்தப்பட்டு தயிர், மோர், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், பால்பவுடர்  உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்பட்டு விற்பனை  செய்யப்படுகிறது.

திருப்பதி லட்டு தயாரிக்க ஈரோடு ஆவின் நிறுவனத்தில்  இருந்துதான் பெரும்பகுதி நெய் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம்  ஆவின் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்து வரும் நிலையில்  உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான பணத்தை  பட்டுவாடா செய்யாமல் வாரக்கணக்கில் நிலுவை வைத்துள்ளதாக உற்பத்தியாளர்கள்  குற்றம் சாட்டிள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில  நிர்வாகி முனுசாமி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனங்கள் பால்  உற்பத்தியாளர்களுக்கு வாரந்தோறும் கொள்முதல் பணத்தை வழங்க வேண்டும்.  உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பாலினை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக  மாற்றுவதால் நல்ல லாபம் கிடைத்து வருகிறது. ஆனால் நிர்வாக சீர்கேட்டின்  காரணமாக ஆவின் நிர்வாகம் திறம்பட நடத்த முடியாமல் உள்ளது. தமிழகம்  முழுவதும் பால் உற்பத்தியாளர்களுக்கு 7 வார நிலுவைத்தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படாமல் உள்ளது. இதில் ஈரோடு ஆவின் நிறுவனத்தின் மூலம் மட்டும் 5  வார நிலுவைத்தொகை ரூ.50 கோடி வழங்கப்படாமல் உள்ளது.   இந்நிலுவைத்தொகையை  வழங்கக்கோரி பல முறை வலியுறுத்தியும் ஆவின் நிர்வாகம் செவிசாய்க்காமல்  உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  மாடுகளுக்கு தீவனங்கள், பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி  வருகின்றனர். எனவே உடனடியாக நிலுவைத்தொகையை ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டும்.  இவ்வாறு முனுசாமி கூறினார்.

Related Stories: