குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடி பகுதியில் கடந்த மாதம் 15 மற்றும் 30, 31ம் தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்ட வந்த நிலையில், கடந்த 15, 16ம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்து நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருமளவில் தேங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக கதிர்வேல்நகர், பாரதிநகர், எஸ்பிஎம் நகர், தபால்தந்தி காலனி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். தெருக்கள் மற்றும் சாலைகள் தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று தண்ணீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் செயின்ட் மேரீஸ் காலனி, லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், வெற்றிவேல்புரம், கோக்கூர் உள்பட பல இடங்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதின் விளைவாக ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் செல்ல பாதைகள் உருவாக்கப்பட்டு, மழைநீர் வடியவைக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் பல இடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து மழைக்இருப்பதால் தேங்கியுள்ள தண்ணீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: