ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பெண்கள் கைது

பெரம்பூர்: ஆந்திராவுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கிய 1200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 3 பெண்களை கைது செய்தனர். சென்னை ஓட்டேரி பகுதியில் இருந்து ரயிலில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட உள்ளதாக ஓட்டேரி நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் மேற்கண்ட பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, பென்சில் லைன் பகுதியில் உள்ள 3 வீடுகளில் சோதனையிட்டபோது, அங்கு 1200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பர்வீன் (42), குட்டியம்மா (40), சசிகலா (49) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் வடசென்னை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசியை வாங்கிவந்து வீடுகளில் பதுக்கி வைத்து பின்னர் ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தி சென்று, அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட 3 பெண்களையும் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: