குடிநீர் வழங்காததை கண்டித்து வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை : கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் கடந்த 2 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர் ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு தெருக்களில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரியிடம் முறையிட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர்  அம்பேத்கர் நகர் பகுதி வழியாக ஊர்வலமாக சென்று கொருக்குப்பேட்டை கே.என்.எஸ் டெப்போ அருகேயுள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தகவலறிந்து ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சென்னை 4வது மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஏழுமலை அங்கு வந்து, உங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: