மாணவர்களுக்கு கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது : 12 கிலோ பறிமுதல்

சென்னை: சென்னை திருமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த காமராஜ் (39) என்பதும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, சென்னையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பெரம்பூர்: புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கன்னிகாபுரம் விளையாட்டு திடல் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த  பெண்ணை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை  சோதனை செய்தபோது, அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், செங்குன்றம் பாலவாயல் பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி  ரமா (48) என்பதும், சென்னையில் பல இடங்களில் கஞ்சா விற்பனை  செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில்  அடைத்தனர். தண்டையார்பேட்டை: ஆர்.கே.நகர்  போலீசார் நேற்று முன்தினம் மாலை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில்  ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு நின்றிருந்த ஒரு வாலிபர், கையில்  வைத்திருந்த பையை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அந்த பையை எடுத்து பார்த்தபோது  ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாணையில், தப்பியோடியது தண்டையார்பேட்டை நேரு நகரை சேர்ந்த பாஸ்கரன்  (23) என்பதும், அப்பகுதியில் கல்லூரி  மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்களிடம்  கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவரை தேடி  வருகின்றனர்.

Related Stories: