தாம்பரம் - மதுரவாயல் சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர் லாரியில் மோதி பரிதாப பலி : தப்பியோடியவர்களுக்கு வலை

சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (30). அதே பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் ஆட்டோ ரேசில் ஈடுபடுவதற்காக போரூர் டோல்கேட் வந்தார். பின்னர் அங்கிருந்து தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆட்டோ ரேஸ் தொடங்கியது. பிரபாகரன் ஓட்டி வந்த ஆட்டோ தரப்பாக்கம் அருகே அசுர வேகத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின் பகுதியில் பலமாக மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரபாகரனை, சக ஆட்டோ டிரைவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு, காயம் குறித்து மருத்துவர்கள் கேட்டபோது, பைக்கில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவித்தனர். சந்தேகமடைந்த மருத்துவர்கள் இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ஆட்டோ ரேசில் ஈடுபட்டு, அதனால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதனிடையே, சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே போலீசார் மருத்துவமனைக்கு வருவதை அறிந்ததும், ரேசில் ஈடுபட்ட மற்ற ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இரவில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

போலீசார் அபராதம் விதித்ததால்  ஆட்டோ டிரைவர் தற்கொலை

வியாசர்பாடி சர்மா நகர் 11வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (48), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ஆட்டோவில் சென்றபோது போக்குவரத்து போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது மூர்த்தி குடிபோதையில் இருந்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை இல்லாததால், மூர்த்தி ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு, வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த மூர்த்தி, நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: