பழங்குடியின மக்களின் கோரிக்கையை ஏற்று தேவர்சோலை பேரூராட்சியில் 342 வீடுகளுக்கு மின் இணைப்பு

ஊட்டி, நவ. 14:   தேவர்சோலை  பேரூராட்சியில் பழங்குடியின மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையினை  ஏற்று 342 வீடுகளுக்கு மின் இணைப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.  கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட  செம்பகொள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.  இக்கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது. இதில், பழங்குடியின மக்கள் குறைந்த அளவில் பயனடைகின்றனர். எனவே  தான், மனுநீதி நாள் முகாம் பழங்குடியின மக்கள் வாழும் இடங்களை தேடி வந்து  நடத்தப்படுகிறது. பழங்குடியின மக்கள் ஒருங்கிணைந்து அரசின் அனைத்து  திட்டங்களையும் தெரிந்து அதிகளவில் பயனடைய வேண்டும். பெற்றோர்கள்  தங்களின் குழந்தைகளை தவறாமல் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கு  அனுப்ப வேண்டும். நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண்மை மாவட்டமாக  அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் இயற்கை வேளாண் பொருட்களை  பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், கறவை மாடுகள் மற்றும் நாட்டுக் கோழி  வளர்க்க மக்கள் அதிகமாக முன்வர வேண்டும்.

 மேலும், அனைவருக்கும்  வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தேவர்சோலை பேரூராட்சியில் 624  பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில், 172  வீடுகள் பணி முடிவடைந்துள்ளது. 130 வீடுகள் தாட்கோ மூலமாகவும், 181 வீடுகள்  குடிசை மாற்று வாரியத்தின் சார்பிலும் கட்டப்பட உள்ளன. தேவர்சோலை  பேரூராட்சியில் 70 ஆண்டு கால கோரிக்கையினை பரிசீலித்து 342  வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

  இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,900 மதிப்பீட்டில் மோட்டார்  பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு  ஊன்றுகோல், செம்பகொல்லி கிராமத்திற்கு 100 உறுப்பினர்கள் கொண்ட விவசாய  குழுக்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ், 5  குழுக்களுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும், 18 விவசாயிகளுக்கு நீர்பாசன  கருவிகள், பஞ்ச காவிய விதைகள் மற்றும் ஸ்பிரிங்ளர் ஆகியவை வழங்கப்பட்டது.  66 பழங்குடியின பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்  உள்ளிட்டவை வழங்கப்பட்டது.  இதில் கூடலூர் எம்எல்ஏ., திராவிடமணி,  மாவட்ட எஸ்.பி. சசிேமாகன், தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம்  சாம்ராஜ், கூடலூர் ஆர்டிஒ., ராஜ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பாபு  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: