திருமானூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனையா?: அதிகாரிகள் திடீர் ஆய்வு

அரியலூர்,நவ.14: திருமானூர் பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளதா என வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் பிளாஸ்டிக் கப், பாலித்தீன் பை, கேரி பேக் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. எனினும் அரியலூர் மாவட்டம் முழுவதும் பொருள்கள் அதிகளவில் விற்பனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாடு குறையாமல் இருக்கிறது. இதனையடுத்து பள்ளி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் முன்னிலையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலா, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் கொண்டு குழுவினர் திருமனூர் பகுதிகளிலுள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, வணிகர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர். தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Related Stories: