2 வருடத்திற்கு முன் மாயமான சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

நாகை, நவ.14: சீர்காழி அருகே பெற்றோர்களிடம் கோபித்துக்கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுவனை நாகை எஸ்பி உத்தரவின்பேரில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாகை மாவட்டம் சீர்காழிஅருகே ஆலவேலி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் விக்னேஷ்(19). இவர் கடந்த 2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தார். அப்போது நன்றாக படிக்கும்படி பெற்றோர்கள் திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து சென்று விட்டார். இதையடுத்து அவரது பெற்றோர் சீர்காழி போலீஸ் ஸ்டேசனில் மகனை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை தேடி வந்தனர். இந்நிலையில் நாகை எஸ்பி செல்வநாகரெத்தினம் உத்தரவின்பேரில் சீர்காழி டிஎஸ்பி வந்தனா மேற்பார்வையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் விக்னேஷை தேடும் பணியை மேற்கொண்டனர். இதில் அவர் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் சென்னை வடபழனியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷை போலீசார் மீட்டு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை மீட்டு தர நடவடிக்கை எடுத்த எஸ்பி செல்வநாகரெத்தினத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: