திருவாரூர் புதிய பஸ் நிலையம் முன்பு தொடர் விபத்துகளை தடுக்க வேகத்தடைக்கு வெள்ளை கோடு

திருவாரூர், நவ.14: திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் முன்பாக விபத்துகளை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.

திருவாரூரில் புதிய பேருந்து நிலையமானது நகரின் 30 வது வார்டு தியாகபெருமாநல்லூரில் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையமானது தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே 500 மீட்டர் தூரத்தில் இருந்து வருவதன் காரணமாக இந்த பேருந்து நிலையத்திற்குள் தஞ்சை, மன்னார்குடி மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வலதுபக்கமாக உள்ளே திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த புதிய பேருந்து நிலையம் இருப்பது வெளியூர் பயணிகளுக்கு தெரியாததன் காரணமாக பேருந்துகள் அனைத்தும் வலது புறத்தில் திரும்பும்போது பின்னால் வரும் வெளியூர் வாகனங்களுக்கு இது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

இதேபோல பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறும் பேருந்துகளில் நாகை, திருத்துறைப்பூண்டி மற்றும் மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு வலதுபுறமாகவும், தஞ்சை, மன்னார்குடி மற்றும் கும்பகோணம் பகுதிக்கு இடது புறமாகவும் திரும்பவேண்டியதன் காரணமாக அப்போதும் இதேபோல விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்து வருகின்றன. எனவே பேருந்து நிலையம் முன் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதுடன், பேருந்து நிலையம் உள்ளது என்பதற்கான பெயர்ப்பலகையும் நகராட்சி மூலம் வைக்க வேண்டுமென பொதுமக்களும் பயணிகளும் விடுத்திருந்த கோரிக்கை குறித்து கடந்த ஏப்ரல் மாதம் 29ந் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்மந்தப்பட்ட இடத்தில் இருபுறமும் நெடுஞ்சாலை துறையினர் மூலம் வேகதடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் போகும் வாய்ப்பு இருந்து வருவதால் இந்த வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கும் பணியில் நேற்று நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.

Related Stories: