திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்ற 5 கடைகளின் உரிமம் ரத்து

திருவாரூர், நவ.14: திருவாரூர் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்ற 5 தனியார் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் இந்த பயிர்களுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் மற்றும் டிஏபி உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு காரணமாக தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் இணை இயக்குனருக்கு வரப்பெற்ற புகாரின் பேரில் மாவட்டம் முழுவதும் வேளாண் துறை அலுவலர்கள் தனியார் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை மற்றும் குடவாசல் ஆகிய ஊர்களில் இது போன்று அதிக விலைக்கு விற்கப்பட்டது தெரிய வந்ததன் பேரில் இந்த 5 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பா சாகுபடிக்காக நவம்பர் மாதத்திற்கு வரும் 20ஆம் தேதி வரையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் தேவை என்ற நிலையில் இதுவரையில், 6 ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  இதுமட்டுமின்றி வரும் 20ம் தேதிக்குள் 2 தினங்களுக்கு ஒரு முறை சென்னை மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலிருந்து ரயில்கள் மூலம் மாவட்டத்திற்கு தலா ஆயிரத்து 500 மெட்ரிக் டன் யூரியா என்ற அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வதை தடுப்பதற்காக வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் வேளாண் அலுவலர்களை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: