டாக்டர் வீட்டில் 28 பவுன் நகைகளை திருடி 2 மாதமாக தலைமறைவாக இருந்த வேலைக்கார பெண், மகன் கைது

திருச்சி, நவ. 14: திருச்சி ஏர்போர்ட் மொரைஸ் சிட்டி 12வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், டாக்டர். இவரது மனைவியும் டாக்டராவார். இவரது வீட்டில் தொட்டியம் பெரியநாச்சிபட்டியை சேர்ந்த சித்ரா (எ) சின்னபொண்ணு(45) என்பவர் வீட்டில் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி கணவன், மனைவி இருவரும் கிளினிக் சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வேலைக்கார பெண்ணான சித்ரா வீட்டில் இல்லை. அக்கம்பக்கம் தேடியும் காணவில்லை. இதில் சந்தேகமடைந்த ராஜ்குமார், பீரோவை சோதனை செய்தபோது அதில் இருந்த 28 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசில் ராஜ்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நேற்று முன்தினம் சொந்த ஊரில் பதுங்கி இருந்த சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருடிய நகைகளை திருப்பூரில் உள்ள மகன் கனகராஜிடம் கொடுத்ததாக கூறினார். அதை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் கனகராஜையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாய், மகனை திருச்சி ஜேஎம் 6 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 மாதமாக தலைமறைவாக இருந்த தாய், மகனை விசாரணை நடத்தி விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

Related Stories: