கடந்த ஓராண்டாக மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரிப்பு: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வேதனை

திருச்சி, நவ. 14: குழந்தைகளுக்கான உரிமையை பாதுகாக்கும் தமிழ்நாடு ஆணையம் சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் அதற்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கான கூட்டம் திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட டிஎஸ்பி கோகிலா மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அதை தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. போதைப்பொருள் உருவாக்கக்கூடிய பயன்பாட்டில் உள்ள பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறோம். சீர்காழியில் 24வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் சிறுவர்கள் அவர்கள் அனைவருமே போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வருகிறது.நாகை மாவட்டத்தில் வெளி நாட்டைச் சேர்ந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்ததில் அதில் ஈடுபட்ட இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்தி உள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை உத்தரகாண்டில் தான் குறைவாக உள்ளது. போதைப்பொருள் அதிகளவில் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருள் விற்பனை கும்பல் குறி வைத்து விற்பனை செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: