துறையூர் அருகே கண்ணனூரில் 5 வகுப்புக்கும் ஒரேயொரு ஆசிரியர்தான்...

துறையூர், நவ.14: துறையூர் அருகே கண்ணனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 வகுப்புக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரே ஒரு ஆசிரியர் உள்ள நிலையில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்த நிலையில் கூடுதலாக கட்டிடம் கட்டித் தரப்பட்டது. இந்நிலையில் இவ்வருடம் இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 50 குழந்தைகள் படித்து வருகின்றனர். மூன்று மாதமாக இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு ஆசிரியரே உள்ளார். ஒரு வகுப்பிற்கு 6 பாடம் வீதம் 5 வகுப்புக்கு 25 பாடங்களை ஒரே ஒரு ஆசிரியரால் எப்படி எடுக்க முடியும்.

இவ்வாறு நிலைமை இருந்தால் குழந்தைகளின் கல்வித்திறன் எப்படி மேம்படும் என இப்பகுதி பெற்றோர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரே ஆசிரியர் உள்ள நிலையில் அலுவலக வேலைகள் மற்றும் 50 குழந்தைகளை ஒரே ஒரு ஆசிரியர் பராமரித்தல் ஆகியவை இயலாத காரியங்களாகும். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ள பல நடவடிக்கைகளின் மூலம் கடந்த சில வருடங்களாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. இந்நிலையில் கண்ணனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் இருப்பது அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக இப்பகுதி பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கண்ணனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: